உலகம்
“இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயார்” - ஹிஸ்புல்லா துணைத்தலைவர் அறிவிப்பு !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது .
அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.
இது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டுவரும் லெபனானின் எல்லையில் கிட்டதட்ட 15 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதனால் 2005-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கவுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவரான நயிம் க்காசம் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பில் சுமார் 50 ஆயிரம் வீரர்களும், 2 லட்சம் வரையிலான ராக்கெட்டுகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே முழு நீளப் போர் ஏற்பட்டால் அது காசாவில் ஏற்பட்டுள்ள சேதத்தை விட பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?