உலகம்

உக்ரைன் ராணுவ மையத்தின் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் : 41 பேர் பலி, 180க்கும் மேற்பட்டோர் காயம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இதனிடையே உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு எதிர்பாராத அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதோடு மட்டுமன்றி ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள 38 மாடிகள் கொண்ட கட்டடம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா விரைவில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் கட்டுமானங்கள் மீது ரஷ்யா கடந்த வாரம் பிரமாண்ட ஏவுகனை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது உக்ரைன் மீது இந்த வாரமும் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. உக்ரைனின் பொல்டாவா நகரில் செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி மையம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

அதோடு இந்த பயிற்சி மையம் அருகேயுள்ள மருத்துவமனையும் ரஷ்ய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ரஷ்யா நடத்திய இந்த அதிபயங்கர தாக்குதலில், நோயாளிகள் , ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். அதோடு 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Also Read: புல்டோசர் கலாச்சாரம் - பொதுமக்களிடம் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் : அகிலேஷ் வலியுறுத்தல்!