உலகம்

"புதின் மோடியை மதிக்கவில்லை, அதனால்தான் அன்று தாக்குதல் நடந்தது"- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

இந்த போரில் இந்தியா நேரு காலத்திய அணிசேரா கொள்கையை கடைபிடித்து நடுநிலையை பேணி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மேற்கு நாடுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது உக்ரைனுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். ஆனால் தற்போது மோடி குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய அவர், "இந்தியா நினைப்பதுபோல் புதின் மோடியை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தகர்த்திருக்காது.

இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவின், இந்தியர்களின் அணுமுறை மாறினால் ரஷ்ய போர் நிச்சயம் முடிவுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து உலகளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வஃக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு : மீண்டும் பல்டியடித்த நிதிஷ்குமார் !