உலகம்

வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீட்டுக்கு தீ வைப்பு... போராட்டக்காரர்கள் ஆத்திரம் - காரணம் என்ன?

பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்தது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ கடந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ராணுவத்தின் ஆதரவுடன் எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கதேசத்தில் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகள் மேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவாமி லீக் கட்சியில் தலைமை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் கொறடாவும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மொர்டாசாவின் வீட்டுக்கும் தீ வைத்துள்ளனர். அவரது வீட்டில் நுழைந்த போராட்டக்கார்கள், அவரின் வீட்டை கொள்ளையடித்து, பின்னர் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மைதானங்களே இல்லாத குஜராத்தில் ஒலிம்பிக் போட்டி ? - அனைத்து வசதிகள் இருந்தும் புறக்கணிக்கப்படும் சென்னை !