உலகம்

கூகுள்க்கு போட்டியாக களமிறங்கிய OPEN AI நிறுவனம் : Search Engine ஆக வெளிவரும் SearchGPT தளம் !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ChatGPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. சுமார் 100 மொழிகளில் ChatGPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் ChatGPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் களமிறங்கியது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு துறையில் களமிறங்கிய கூகுள் நிறுவனம் 'Bard' எனப் பெயரிடப்பட்டிருக்கும் செயலியை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து ஜெமினி செயலையும் அறிமுகப்படுத்தியது. மேலும் ChatGPTக்குப் போட்டியாக TruthGPT எனும் AI செயலியை உருவாக்கவுள்ளதாக உலக பணக்காரர் எலான் மஸ்க்கும் அறிவித்தார்.

இந்த நிலையில், OPEN AI நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளத்துக்கு போட்டியாக SearchGPT என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த துறையில் கடந்த 20 ஆண்டுகளாக கோலோச்சி வரும் கூகுள் நிறுவனத்துக்கு இந்த புதிய தளம் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய தேடுதல் தளம் பல வகையான முடிவுகளில் இருந்து உங்களுக்கான தகவலை சுருக்கி, அந்த சுருக்கமான விளக்கத்தையும், தகவலை சேகரிக்கும் இணைப்புகளையும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியை சமாளிக்க கூகுள் நிறுவனமும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உ.பி.க்கு 3,924 கோடி, குஜராத்துக்கு 3,777 கோடி- தமிழ்நாட்டுக்கு வெறும் 713 கோடி- அம்பலப்படும் பாஜக அரசு!