உலகம்

கருத்து கணிப்பில் முந்தும் ஜனநாயக கட்சி - அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக மாறுவாரா கமலா ஹாரிஸ் ?

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.

அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், பிரச்சார மேடைகளில் அவர் தொடர்ந்து உளறி வருவது அரசியல் ரீதியாக அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு பதிலாக தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயக கட்சிக்குள்ளேயே அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸையும் முன்மொழிந்தார்.

ஏற்கனவே கட்சிக்குள்ளும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு அதிகரித்து வந்த நிலையில், அவர் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போதைய நிலையில், டொனால்ட் டிரம்பை விட கமலா ஹாரிஸ் இரண்டு சதவீதம் அதிகமான புள்ளிகள் அதிகம் பெற்றிருப்பதாக கருத்து கணிப்பு வெளிவந்துள்ளது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயக கட்சிக்கான ஆதரவு அதிகரிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜோ பைடனை விட டிரம்ப் இரண்டு புள்ளிகள் அதிக ஆதரவை பெற்றிருந்தார். தற்போது டிரம்ப்பை விட கமலா ஹாரிஸ் இரண்டு புள்ளிகள் அதிக ஆதரவு பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து : பயணம் செய்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக அச்சம் !