உலகம்

இஸ்ரேல் மீது ஏமனின் ஹெய்தி அமைப்பு தாக்குதல் - பதிலடி கொடுத்த இஸ்ரேல்... எல்லைகளை தாண்டும் போர் பதற்றம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஏமனின் ஹெய்தி அமைப்பு ஆகியவை ஆதரவாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹெய்தி அமைப்பு இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல்-அவிவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஏமனின் துறைமுக நகரமான ஹொடைடா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் சேமிப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: டிரம்ப்பை எதிர்க்க பைடனுக்கு போட்டியாக களத்தில் ஹிலாரி கிளிண்டன்- சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல் !