உலகம்

ட்ரம்ப் சுடப்பட்ட விவகாரம் : “என்னையும் 2 முறை கொலை செய்ய முயன்றார்கள்” - எலான் மஸ்க் பகீர் !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அப்போது அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

எனினும் தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பென்சில்வேனியாவில் (ஜூலை 13) நடைபெற்ற பிரசாரத்தில் டிரம்ப் கலந்துகொண்டார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரம்ப்பை நோக்கி சுட்டுள்ளார். இதில் டிரம்ப்பின் காதில் அந்த தோட்டா உரசிச்சென்றது. இதனிடையே டிரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக சுட்டு வீழ்த்தினர்.

மேலும் ரத்தம் சொட்டிய நிலையில், டிரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் சுடப்பட்ட விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பி வருகிறது. பொதுவெளியில் உலக பிரபல தலைவர் இப்படி சுடப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சூழலில் இந்த சம்பவத்தை தொடர்ந்து Ian Miles Cheong என்ற ஊடகவியலாளர் ஒருவர், "தயவுசெய்து, உங்கள் பாதுகாப்பை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும். ஏனெனில் கொலை கும்பல் டிரம்ப் அருகே வரும்போது, உங்கள் அருகேயும் விரைவில் வர வாய்ப்பு உள்ளது" என்று எலான் மஸ்க்கை குறிப்பிட்டு அறிவுறுத்தியிருந்தார்.

இவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், தான் இரண்டு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பதிலில், "ஆபத்தான சூழ்நிலைகள் நம்மை எதிர்கொண்டுள்ளன. கடந்த 8 மாதங்களில் 2 பேர் (வெவ்வேறு சந்தர்ப்பங்களில்) என்னை கொலை செய்ய முயன்றனர். டெக்சாஸில் அமைந்துள்ள டெஸ்லாவின் தலைமையகத்தில் இருந்து 20 நிமிட தூரத்தில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல்வேறு சர்ச்சைகளில் கருத்துகளை தெரிவித்து இவரும் சர்ச்சையில் சிக்குவார். அண்மையில் கூட, மின்னனு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு எளிதாக நடக்கும் என்று கருத்து தெரிவித்தது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஒன்றிய அமைச்சருக்கும், எதையும் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று பதிலடி கொடுத்தார். இவ்வாறு தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு கொலை முயற்சி நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மணிப்பூரில் மீண்டும் வன்முறை : CRPF வீரர் சுட்டுக்கொலை - வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு!