உலகம்

பிரிட்டன் தேர்தல் : இடதுசாரி வேடத்தில் இருக்கும் வலதுசாரி? - யார் இந்த புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்?

பிரிட்டனில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆட்சிக்கு வந்தது. அப்போது டேவிட் கேமரான் பிரதமரானார். இவரைத்தொடர்ந்து தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோர் பிரதமராக பொறுப்பேற்றனர். ஆனால் இதில் லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று 50 நாட்களில் ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் பிரதமரானார்.

2010 முதல் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில், 2024-ல் (தற்போது) நடைபெற்ற தேர்தலில் தோல்வியை அடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் நேற்று (ஜூலை 4) சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 650 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் முக்கிய கட்சிகளான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் (Labour) இடையே கடும் போட்டி நிலவியது.

ரிஷி சுனக் vs கெய்ர் ஸ்டார்மர்

தொடர்ந்து 14 ஆண்டுகளாக ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த முறை யார் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி பலர் மத்தியிலும் நிலவி வந்தது. இதனிடையே தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கெய்ரின் தொழிலாளர் கட்சியே வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது 650 தொகுதிகளில் 410 தொகுதிகளை கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த முறை ரிஷி சுனக் வரலாறு காணாத அளவு தோல்வியை சந்தித்துள்ளார். 650-களில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 119 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவை 326 தேவை. ஆனால் தற்போது வரை தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளதால் பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இங்கிலாந்தின் புதிய பிரதமர் : யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?

* இங்கிலாந்தில் புதிய பிரதமராகி இருக்கும் கெய்ர் ஸ்டார்மர், எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

* கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார்

* 2015-ல் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார்

* தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெரெமி கோர்பின், கட்சியை விட்டு நீங்கக் காரணமாக இருந்தவர்.

* 2019-ம் ஆண்டு தேர்தல் தோல்வியால் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெரெமி கோர்பின் ராஜினாமாவை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக 2020-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் கெய்ர் ஸ்டார்மர்.

* யூதரான கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பவர். காசாவில் இஸ்ரேல் தொடுத்திருக்கும் போரை பல நாட்டு தலைவர்களும் தவறு என்று கூறி வந்த நிலையில், அதனை நியாயம் என்றவர்.

* கெய்ர் ஸ்டார்மர் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நவதாராளமயத்தை முன்னெடுத்த மார்கரேட் தாட்சரை ஆதரித்தவர்.

* இந்தியாவுடன் FTA எனப்படும் தங்குத் தடையற்ற வணிக ஒப்பந்தங்களை போட முனைப்பு கொண்டிருப்பவர்.

* மோடியின் வலதுசாரி அரசியலுடன் முரண்பட்டிருந்த தொழிலாளர் கட்சியை மாற்றியவர்.

* சைவ உணவுப் பிரியர். கோவில்களுக்கு சென்று இந்திய வாக்காளர்களை ஈர்த்தவர். வலதுசாரிய தன்மை கொண்டவரென விமர்சிக்கப்படுபவர்.

Also Read: பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர்!