உலகம்
”இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அதிகரிப்பு” : அமெரிக்கா வேதனை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றச் சட்டங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
‘சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆண்டறிக்கையை’ அவர் புதன்கிழமை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சில மாநிலங்களில் திருமணத்துக்காக வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன.
வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் மூலம் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவதாகவும் சிறுபான்மையினர் புகார் கூறுகின்றனர் என ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக ஆன்டனி பிளிங்கன் பேசியதாவது: ”மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க உலகளவில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கடினமாகப் போராடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள், வெறுப்புப் பேச்சுகள், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்களின் வீடுகளை இடித்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றார்.
இந்தியாவில் மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை இந்தியா ஏற்கெனவே நிராகரித்தது. மேலும், தவறான தகவல்கள் மற்றும் சரியான புரிதல் இன்மையால் இதுபோன்ற அறிக்கைகளைத் தயாரித்து சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். அமெரிக்காவுடனான உறவை நாங்கள் மதிக்கிறோம். உண்மையாகவே கவனத்தில் கொள்ளவேண்டிய விவகாரங்களில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்’ என இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!