உலகம்

ராணுவ ரகசியம் வெளியீடு : 5 ஆண்டுகளுக்கு பிறகு அசாஞ்சே விடுதலை -அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன?

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange). பிரபல ஊடகவியலாளரான இவர், விக்கி லீக்ஸ் (WikiLeaks) என்ற இணைய ஊடகத்தை கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இணையதளத்தில் பல்வேறு முக்கிய செய்திகள், தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருந்தது. இந்த சூழலில் கடந்த 2010-ம் ஆண்டு இதில் அமெரிக்காவுக்கு எதிராக பல விஷயங்கள் வெளியானது.

அதாவது ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடந்திய மனித உரிமை மீறல்கள், ஊழல், போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பான இரகசிய தகவல்கள் விக்கி லீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா இராணுவத்தின் இரகசியங்கள் வெளியானதால், ஜூலியன் அசாஞ்ச் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்தது. மேலும் அவரை குற்றவாளியாகவும் அமெரிக்கா அறிவித்தது.

இப்படியாக இவர் இந்த சர்ச்சையில் சிக்கி பிரச்னையான நிலையில், இவர் மீது அதே ஆண்டில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது சுவீடன் நீதிமன்றம். பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து மீண்டும் 2012-ம் ஆண்டில் இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அதிலிருந்து தப்பிக்க அதே ஆண்டில் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். ஆரம்பத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஈகுவடார் அரசு, கடந்த 2019-ம் ஆண்டில் அதனை திரும்பப்பெற்றது.

இதையடுத்து ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்ட நிலையில், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. அவர் மீது இராணுவ ரகசியங்களை திருடியது உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது.

ஒருவேளை தான் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால், அந்நாட்டு அரசு தனக்கு மரணதண்டனை விதிக்குமோ என்ற பயத்தில் இங்கிலாந்து அரசின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையிட்டார் அசாஞ்சே. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதித்தது.

அதன்படி ஜூலியன் அசாஞ்சேவுக்கும் அமெரிக்கா நீதித்துறைக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்றும் , இராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும், அவருக்கு 62 மாதங்கள் (5 வருடங்கள் 2 மாதங்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அசாஞ்சே ஏற்கெனவே இங்கிலாந்தில் 5 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்ததால், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜூலியன் அசாஞ்சே (52), தனது இளம் வயதில் தொழில்நுட்பத்தில் மிகுந்த திறமைசாலியாக இருந்துள்ளார். நாசா, பெண்டகன் உள்ளிட்ட பலவற்றை ஹேக் செய்து அனைவர் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இராணுவ இரகசியங்களை கூட அவர் ஹேக் செய்தே வெளியிட்டார். அவர் மீது பல சைபர் கிரைம் குற்றச்சாட்டுகள் உள்ளன.

விக்கி லீக்ஸ் உருவாக்கத்தில் இவரது பங்கும் மிகவும் முக்கியமானது. சோமாலியாவில் அரசு அதிகாரிகளைப் படுகொலை செய்ய கூலிப்படையினரை சோமாலியா தலைவர் ஒருவர் ஊக்குவித்தது தொடர்பான செய்திதான் விக்கிலீக்ஸின் முதல் முக்கிய செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘ஜெய் இந்துராஷ்டிரா’ - திருந்தாத பாஜக... பதவியேற்பின்போது பாஜக எம்.பி. முழக்கத்தால் பரபர !