உலகம்

சொந்த அரசை கண்டித்து இஸ்ரேல் பொதுமக்கள் போராட்டம் : பிரதமர் பதவி விலககோரி எழும்பிய முழக்கங்கள் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்ருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது.

அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடக்கும் இந்த போர் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துவைத்துள்ள பணயக்கைதிகளிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத இஸ்ரேல் அரசை கண்டித்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தை கலைக்க போலிஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் போலிஸார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களின் இந்த போராட்டம் இஸ்ரேல் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாஜகவுக்கு 50 இடங்களை குறைத்த Zee News கருத்து கணிப்பு : இரண்டே நாளில் மாறிய முடிவு... பின்னணி என்ன ?