உலகம்

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகள் : தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற இஸ்ரேல் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் உள்ள சில இடங்களின் நிர்வாகத்தை பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பிடம் இஸ்ரேல் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏராளமான உலக நாடுகள் அறிவித்துள்ளன. அதில் சில நாடுகள் பாலஸ்தீனத்துடன் வர்த்தக உறவுகளையும் பேணி வருகிறது. எனினும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அடுத்தடுத்து அறிவித்தன. இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் இதுவரை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் இஸ்ரேலை அங்கீகரிக்காத நிலையில், அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது பெரும் மாற்றமாக பார்க்கப்பட்டது.

israel palestine map

இந்த நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மூன்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து தங்களது தூதர்களை வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயர்லாந்து, நார்வே நாடுகளிலிருந்து எங்கள் தூதரை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஹமாஸ் எனும் பயங்கரவாத அமைப்பு யூதர்கள் மீது மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியது. கொடூரமான பாலியல் வன்கொடுமைகளை செய்தது. ஆனாலும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதன் மூலம் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு ஆதரவளித்துள்ளன. எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: "பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் போலீஸில் சரணடைய வேண்டும்" - JDS தலைவர் தேவகவுடா காட்டம் !