உலகம்

"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே காஸா மக்களைக் இஸ்ரேல் அரசு கொன்று குவித்ததாக தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், போர்நிறுத்த உத்தரவை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இது குறித்து இஸ்ரேல் விளக்கமளிக்க உத்தரவிட்டது.

தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிலாட் நோம், "தென்னாப்பிரிக்காவின் வாதங்களை ஏற்க முடியாது. அதன் குற்றச்சாட்டுகள் மிகவும் அப்பட்டமானதாக இருக்கிறது. இந்தப் போர், எல்லாப் போர்களைப் போலவே நடக்கிறது. இந்த போரினால் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் இந்த போர் இரண்டு தரப்புக்கும் சோகமானது மற்றும் பயங்கரமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இனப்படுகொலை என்கிற வாதத்தை ஏற்க முடியாது. ஆயுத மோதல் என்பது இனப்படுகொலைக்கு நிகரான சொல் கிடையாது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை"என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: "பாஜக அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டம்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !