உலகம்

காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் வடக்கு காசா மற்றும் மத்திய காசா பகுதிகள் முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரம் மட்டுமே இஸ்ரேலிய படைகளில் கட்டுப்பாட்டுக்கு செல்லாமல் இருக்கிறது. இதனால் ரஃபா நகரத்திலும் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடத்தை அறிந்து தரைவழி தாக்குதல் நடந்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும் வேலையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

ஆனால், ரஃபா நகரில் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு கடுமையாக அதிகரிக்கும் என்ற பல்வேறு நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன. ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல் ரஃபா நகரின் தாக்குதல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரேல் செய்து வருகிறது.

ரஃபா நகரில் மட்டும் தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி மத்திய காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகருக்கு செல்லுமாறு இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதோடு இதுவரை 3 லட்சம் மக்கள் ரஃபாவிலிருந்து கான் யூனுஸ் நகருக்கு சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் ரஃபா நகரில் இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை நடத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.

Also Read: ரஷ்ய படைகள் மீது உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் : ஒரே நாளில் உயிரிழந்த 1,740 ராணுவ வீரர்கள் !