உலகம்

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஹமாஸ் தரப்பில் இஸ்ரேல் பாலஸ்த்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் தங்கள் அமைப்பை கலைத்துவிட்டு ஆயுதங்களையும் துறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், பாலஸ்த்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க இஸ்ரேல் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே நேரம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 25 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!