உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்திய அமெரிக்கா : காசா மீதான தாக்குதலை கண்டித்து அறிவிப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் வடக்கு காசா மற்றும் மத்திய காசா பகுதிகள் முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரம் மட்டுமே இஸ்ரேலிய படைகளில் கட்டுப்பாட்டுக்கு செல்லாமல் இருக்கிறது. இதனால் ரஃபா நகரத்திலும் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடத்தை அறிந்து அங்கு முழு அளவிலான தரைவழி தாக்குதல் நடந்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்ததாக இஸ்ரேல் ரஃபா நகரில் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக காசாவின் ரஃபா நகரில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இதனால் இஸ்ரேலுக்கு இரண்டு வாரத்துக்கு ஆயுதங்கள் விற்பனையை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Also Read: “பாஜக அரசின் பாரபட்சத்துக்கு இடையே மகத்தான சாதனை படைக்கும் திமுக ஆட்சி” - செல்வப்பெருந்தகை புகழாரம் !