உலகம்

இஸ்ரேல் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா திட்டம் : பின்னணி என்ன ?

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கு காசாவை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள் தெற்கு காசாவில் போரினை தொடர்ந்து நடத்தி வந்தன.

இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போரினை நிறுத்துமாறு கடந்த சில வாரங்களாக அமெரிக்கா இஸ்ரேலை வற்புறுத்தி வருகிறது. ஆனால், இஸ்ரேல் அமெரிக்காவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுத உதவிகளை செய்து வரும் நிலையில், சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை அமலாகும் பச்சத்தில் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலால் எந்தவித ஆயுதங்களையும் வாங்க முடியாது. ஆனால், இஸ்ரேல் மீது யாராவது தடை விதிக்க நினைத்தால், எனது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவேன் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் . இதனால் இஸ்ரேல் - அமெரிக்க உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read: வெறுப்பு பேச்சு விவகாரம்: சர்வதேச ஊடகங்கள் கண்டனம் -உலக நாடுகள் மத்தியில் தேசத்தின் மானத்தை வாங்கிய மோடி!