உலகம்

ஐ.நா-வில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : தடுக்காத அமெரிக்கா... முடிவுக்கு வருமா யுத்தம் ?

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில காசா பகுதியில் கடைக்கோடி பகுதியில் இருக்கும் ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிரான போர் நிறுத்த தீர்மானம் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடிக்கும் என எதிர்க்கப்பட்ட நிலையில், அதனை அமெரிக்க செய்யாதது பாராட்டை பெற்றுள்ளது.

முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இஸ்ரேல் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Also Read: "மோடி வடிக்கும் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது, அவரை எப்படி தமிழ்நாடு நம்பும்?" - முதலமைச்சர் விமர்சனம் !