உலகம்

இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 103 உறவினர்களை இழந்த நபர் - மீட்கப்படாத பலரின் சடலங்கள் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவரின் 103 உறவினர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. காசா பகுதியை சேர்ந்தவர் அஹ்மத் அல்-குஃபேரி. இவர் மேற்குக்கரை பகுதியில் பணிபுரிந்து கொண்டுள்ளார்.

அப்போது இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்த நிலையில், அவர் காசா திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டார். இதனிடையே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவரது மனைவி மற்றும் அவரது மூன்று மகள்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரே பகுதியில் வசித்து வந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் 103 பேர் கொல்லப்பட்டனர். அதில் பலரது சடலம் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் அஹ்மத் அல்-குஃபேரி கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குளிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட கங்கை... மோடி ஒதுக்கிய ரூ.20,000 கோடி எங்கே ? நெட்டின்சன்கள் கேள்வி !