உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் சிலி காட்டுத்தீ : நாசமான 26,000 ஹெக்டர் காடுகள் : 143-ஐ தொட்ட உயிர்பலி !

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு கடும் வெப்ப அலை வீசியது. இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.

அதே போல பாகிஸ்தான் போன்ற இடங்களில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. கென்யா போன்ற நாடுகளில் கடும் வெப்பத்தால் அங்குள்ள வன விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த நிலையில், சிலி நாட்டில் வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு வெப்பம் பதிவானது. அந்நாட்டின் பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவானது. இதன் காரணமாக, சிலி நாட்டின் வினா டெல் மார் நகருக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இந்த காட்டுத்தீ அதிவேகத்தில் பரவியதால் 26,000 ஹெக்டர் நிலப்பரப்பிலான வனப்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த காட்டுத்தீயால் 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா முற்றிலும் எரிந்து நாசமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காட்டுத்தீயில் சிக்கி முதல் நாளிலேயே 46 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Also Read: வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறி ஏமாற்றிய பாஜக அரசு : ம.பி-யில் சோகம் !