உலகம்

நிலவில் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் : இறங்கியதில் அதில் ஏற்பட்ட சிக்கல்.. முழு விவரம் என்ன ?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது.

'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிறக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றது.

இந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் 5-ம் நாடாக ஜப்பான் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் 4 மாத பயணத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கி சாதனை படைத்தது.

ஆனால், அதன் பின்னர் அவர் பேட்டரியில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அந்த விண்கலம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலவில் ஸ்லிம் விண்கலம் திட்டமிட்ட இடத்தில தரையிறங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அதில் பொருத்தப்பட்டிருந்த சூரியத் தகடுகளில் பழுது ஏற்பட்டதாகவும், இதனால் சூரிய ஒளி மூலம் அந்த விண்கலத்தால் ஆற்றலை பெறமுடியவில்லை என்றும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக ஸ்லிம் விண்கலம் சேகரித்த தரவுகள் அவசர அவசரமாக பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், விரைவில் இதுகுறித்து முழு விவரமும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் ஜப்பான் விண்வெளி பயணத்தில் இது ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Also Read: ராமர் கோயில் : தமிழ்நாடு அரசுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பும் வதந்தி... குட்டு வைத்த அமைச்சர் சேகர் பாபு!