உலகம்

"எங்கள் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் நிறுத்தப்படாது" - இஸ்ரேல் பிரதமர் கருத்தால் பரபரப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 22 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அனைத்து இலக்குகளையும் நாங்கள் அடையும் வரை போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் எங்களுக்கெதிராக ஒரு"தாக்குதலை நடத்தியது. எனவே ஹமாஸை ஒழிப்பதற்கும்,எங்களின் பணயக்கைதிகளை மீட்பதற்கும் இந்த தாக்குதல் அவசியம். காஸா இனி ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கும் போருக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, இந்த அனைத்து இலக்குகளையும் நாங்கள் அடையும் வரை போர் நிறுத்தப்படாது. தெற்கிலும், வடக்கிலும் பாதுகாப்பை மீட்டெடுக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அதுவரை, அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, முழுமையான வெற்றியை அடையும் வரை ஒன்றுபட்ட சக்திகளுடன் நாங்கள் போரைத் தொடர்வோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: அதானி விவகாரம் : “குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்...” - முரசொலி !