உலகம்

8 மாதங்களில் இல்லாத தாக்குதல் ; மீண்டும் தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா போர் : ஒரே நாளில் கொடூரம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

கடந்த சில மாதமாக உக்ரைன்-ரஷ்யா இரண்டு தரப்பும் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தாத நிலையில், இந்த போர் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாக ரஷ்யா தரப்பில் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனின் டொன்பஸ் பிராந்தியம் முழுவதும் ரஷ்யாவிடம் வீழ்ந்த நிலையில், கெர்சன், பாக்முத் ஆகிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒரே நாளில் உக்ரைனின் பல்வேறு நிலைகள் மீது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு பிறகு ரஷ்யா இந்த அளவு தீவிர தாக்குதல் நடத்தியதாக போர் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!