உலகம்

90 % குறைந்த சுற்றுலா பயணிகள் வருகை - போரால் படுகுழியில் இஸ்ரேல் பொருளாதாரம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த போர் காரணமாக கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 2022 நவம்பரில் இஸ்ரேலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3,69,800 ஆக இருந்த நிலையில், தற்போது 39 ஆயிரமாக குறைந்தது. இது 90 % வீழ்ச்சியாகும்.

அதே போல, 2022 நவம்பரில் 6,45,300 இஸ்ரேல் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நிலையில், அது 2023 நவம்பரில் 1,48,700 பேராக குறைந்துள்ளது. இது 75 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பொருளாதாரத்தில் சுற்றுலாவின் பங்கு அதிகம் இருக்கும் நிலையில், இதனால் இஸ்ரேலிய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.