உலகம்

புரட்சி படையிடம் 180 இடங்களை இழந்த மியான்மர் ராணுவம் : விரைவில் ராணுவ ஆட்சி அகற்றப்படும் என நம்பிக்கை !

மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்த நாட்டில் பல ஆண்டுகளாக புரட்சி படையினர் போராடி வருகின்றனர். சமீபத்தில், 3 கிளர்ச்சிப் படையினர் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி ராணுவத்தின் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்திய எல்லையை ஒட்டியுள்ள மியான்மார் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி ராணுவ முகாமை புரட்சி படையினர் கைப்பற்றினர்.

தொடர்ந்து , 4 முக்கிய ராணுவ தளங்கள் சீனா எல்லையில் அமைந்துள்ள 4 பொருளாதார தளங்கள் உள்பட 180 வலுவான ராணுவ நிலைகளை ராணுவத்திடமிருந்து புரட்சி படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் ராணுவ ஆட்சி அங்கு வலுவிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புரட்சி படையினரின் செய்தி தொடர்பாளர் லீ க்யார் வின் கூறுகையில், "தற்போதைய உள்நாட்டு போர் மியான்மரில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கான வாய்ப்பாகும்," என்று தெரிவித்தார். இதன் மூலம் அங்கு ராணுவ ஆட்சி வீழ்ந்து மாற்று அரசு உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து 1000 நிலநடுக்கங்கள் : 1 கி.மீ ஆழத்தில் எரிமலை குழம்பு.. மிகப்பெரும் ஆபத்தில் ஐஸ்லாந்து நகரம்