உலகம்

"மக்கள் இறந்தால் இறக்கட்டும், பொருளாதாரமே முக்கியம்"- பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கருத்தால் சர்ச்சை!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உலகமே கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோயால் சிக்கித் தவித்தது. இந்த தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் மக்களின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்துதான் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் உயிரிழப்பும் தடுக்கப்பட்டது. அதன் பின்னரே உலகம் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனிலும் கொரோனா காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, கடும் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இதனிடையே அங்கு கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும். அதனை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் ஆராய குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் விசாரணையின் போது, பிரிட்டன் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த பேட்ரிக் வாலன்ஸின் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், ப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு பற்றி அவர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டைரியில், "கொரோனா காரணமாக ஊரடங்குக்கு உத்தரவிட வேண்டாம். அப்படி செய்தால் அது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் வலுவிழக்கச் செய்யும். எனவே, மக்கள் இறந்தால் இறக்கட்டும். அரசு அதை அனுமதிக்க வேண்டும்" என்று தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் கூறியதாக எழுதியுள்ளார்.

இது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிரிட்டனில் ரிஷி சுனக்கின் செல்வாக்கும், கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கும் குறைந்து வரும் நிலையில், தற்போது இந்த டைரி விவகாரமும் ரிஷி சுனக்கின் பெயருக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read: Deep Fake வீடியோக்கள் : 36 மணி நேர காலக்கெடு - சமூக வலைத்தளங்களுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை !