உலகம்
"பின்விளைவுகளைப் பற்றி யோசித்து செயல்படுங்கள்" - பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை !
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. அதிலும் சமீப சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதோடு தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தானுக்கெதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதன் காரணமாக ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், பல லட்சம் ஆப்கானியர்கள் இன்னும் வெளியேறாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளனர். அதே நேரம் பாகிஸ்தானை விட்டு வெளியேற ஆப்கானியர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும் தர வேண்டும் என தாலிபான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு எதைச் செய்வதாக இருந்தாலும், பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என தாலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யாகூப் முஜாஹித், "பாகிஸ்தானில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள், ஆப்கானியர்களிடம் கொடூரமாக நடந்துகொள்ளக் கூடாது. ஆப்கானிஸ்தான் மக்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதையும் திருடுவதையும் தாலிபான்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தான் அரசு எதைச் செய்வதாக இருந்தாலும், பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
பாகிஸ்தான் அரசு இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதுஇரு நாடுகளிடையேயான உறவை மிகக் கடுமையாக பாதிக்கும். பாகிஸ்தானில் ஆப்கன் மக்களுக்கு எதிராக நிலவும் சூழலை முடிவுக்குக் கொண்டுவர, ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் பாகிஸ்தானை வலியுறுத்த வேண்டும் " என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!