உலகம்
“காஸா மீது அணுகுண்டு வீசுவோம்..” - இஸ்ரேல் அமைச்சரின் பேச்சால் கொந்தளித்த உலக நாடுகள் ! - விளைவு ?
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்-அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் என்ற அமைப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதியில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் போன்றவற்றில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதைகள் அமைந்திருப்பதாக கூறி அங்கு இஸ்ரேல் இராணுவம், வான்தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதற்கு உலக நாடுகள் பல இந்த போரை நிறுத்தும்படி அறிவுறுத்தி வருகிறது. அதோடு இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் பலரும் இருந்து வருகின்றனர். மேலும் இஸ்ரேலின் கடும் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் பாதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 'காசா மீது அணுகுண்டு வீசுவோம்' என்று இஸ்ரேல் அமைச்சர் கூறியுள்ளது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இஸ்ரேலில் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் அமிச்சாய் எலியாஹு (Amichai Eliyahu). இவர் அண்மையில் ரேடியோ ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்த பிணை கைதிகள் தொடர்பாக பேசி வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "காஸா மீது அணுகுண்டு வீசுவது எங்களின் ஒரு விருப்பம்" என்று பேசியுள்ளார். இவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உலக நாடுகள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்த சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹுவை இடைநீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், "அமைச்சர் அமிச்சாய் எலியாஹுவின் பேச்சு உண்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இஸ்ரேலும், அதன் இராணுவ படைகளும் அப்பாவி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சர்வதேச சட்டங்களுக்கு இணங்கச் செயல்படுகின்றன. எங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை அவ்வாறே செயல்படுவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று இஸ்ரேல் இராணுவம் அல்-ஃபகூரா என்ற பள்ளி மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 54 பேர் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இத்தகையை நடவடிக்கைக்கு உலகளவு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!