உலகம்

"இஸ்ரேலின் நடவடிக்கை அந்த நாட்டுக்கே பின்னடைவாக அமையும்" -அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த வாரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கசாவுக்கு செல்லும் குடிநீர், உணவுப்பொருள்கள், மருத்துவ பொருள்கள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் அரசு தடுத்து வைத்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் குரல்கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கை அந்த நாட்டுக்கு கடும் பின்னடைவாக முடியும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "காசா மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் இஸ்ரேல் அரசின் முடிவு அங்கு நிலைமையை மோசமாகும். இந்த நெருக்கடி பல தலைமுறைகளாகப் போராடும் பாலஸ்தீனிய மக்களின் மனப்பான்மையை கடினப்படுத்தும்.

இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகள் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்ட நீண்டகாலமாக முயலும் முயற்சிகளை குறைத்து அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமையும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒபாமா அதிபராக இருக்கும் போது இஸ்ரேல் -பாலஸ்தீன் இடையே அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிலையில், அது தோல்வியில் முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இஸ்ரேல் VS ஹமாஸ் : பாலஸ்தீன போராளி குழுக்கள் உருவாக காரணம் என்ன ? அவை சாதித்ததும், சறுக்கியதும் !