உலகம்

26 முறை கத்திக்குத்து: மத வெறி அமெரிக்கரால் சிறுவன் குத்திக்கொலை.. இஸ்ரேல் -பாலஸ்தீன் சர்ச்சை காரணமா ?

அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கு பகுதியில் 32 வயது பெண் ஒருவர் தனது 6 வயது மகனுடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று அந்த வீட்டின் உரிமையாளருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணையும், அவரின் 6 வயது மகனையம் கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.

வந்தவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சிறுவனையும், அவரின் தாயாரையும் மட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த சிறுவனின் உடலில் 26 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 71 வயதான வீட்டு உரிமையாளர் ஜோசப் ஸூபா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவனின் தாயார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த மோதல் நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் , இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புள்ளிபட்டியலில் கடைசி இடம்: வங்கதேசம், நெதர்லாந்துக்கும் கீழே சென்ற சோகம்.. பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா!