உலகம்

ஆளும் அரசின் மசோதாவுக்கு ஆதரவு.. அமெரிக்க நாடாளுமன்ற அவை தலைவர் பதவி நீக்கம்.. எதிர்க்கட்சிகள் அதிரடி !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்திலும் அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவையில் தற்போது குடியரசுக் கட்சிக்கு 221 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு 212 இடங்களும் உள்ளன.

இதனால் தற்போது பிரதிநிதிகள் சபையில் எதிக்கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த அவையின் தலைவராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்காா்த்தி இருந்து வந்தார். ஆனால், ஆளும் கட்சியோடு அவர் உடன்பட்டு நிற்கிறார் என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோ பைடன் அரசு கொண்டுவந்த அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றமுடியாத நிலை இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தில் கெவின் மெக்காா்த்தியின் ஆதரவு காரணமாக அந்த மசோதா நிறைவேறியது. அப்போதே அவரின் பதவியை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பறிப்பார்கள் எனக் கூறப்பட்டது.

அதற்கு ஏற்ப தற்போது கெவின் மெக்காா்த்தியின் அவை தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான தீர்மானம் கடந்த செவ்வாய் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகிய நிலையில், அந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேறியது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பொறுப்பிலிருந்து ஓட்டெடுப்பு மூலம் நீக்கப்பட்ட முதல் நாடாளுமன்ற அவைத் தலைவா் என்ற மோசமான பெருமையை கெவின் மெக்காா்த்தி பெற்றுள்ளார்.

Also Read: மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு என்ன ? சாதிவாரி கணக்கெடுப்பால் இந்தியாவில் நடந்த மாற்றம் என்ன ?