உலகம்

கனடா -இந்தியா மோதல்.. அமெரிக்காவின் ஆதரவு யாருக்கு? - பென்டகனின் முன்னாள் அதிகாரி பதில் !

இந்தியாவில் ஒருகாலத்தில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை பெரிய அள்வில் எழுந்த நிலையில், இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நடவடிக்கை காரணமாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தியாவில் காலிஸ்தான் கோரிக்கை முடிவுக்கு வந்தாலும், இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வாழும் கனடாவில் அந்த கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

சீக்கியர்கள், கனடா நாட்டு மக்கள் தொகையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களின் இந்த கோரிக்கையால் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. அந்த முதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஜூன் 18-ம் தேதி அன்று காலிஸ்தான் கோரிக்கை குறித்து போராட்டங்களை நடத்திவந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கனடா அரசு, நிஜ்ஜாரின் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு இருக்கலாம் என சந்தேகித்தது.

அதனைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டியதோடு அந்நாட்டுக்கான இந்திய தூதர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று அறிவித்தது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுக்கான கனடா தூதர் 5 நாட்களுக்குள் வெளியேறவேண்டுமென இந்திய அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த இரு நாடுகளின் நட்பு நாடுகளுக்கு இடையே யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கனடா மற்றும் இந்தியா இந்த இரு நாடுகளுக்கு இடையில் அமெரிக்கா யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் இந்த சூழ்நிலையில் அமெரிக்கா இந்தியாவைத் தான் ஆதரிக்கும் என கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், கனடா இந்தியாவுடன் சண்டையிடுவது யானைக்கு எதிரான எறும்புடன் சண்டையிடுவது போன்றது. பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அமெரிக்கா இரண்டு நண்பர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கும். காரணம் இந்தியா கனடாவை விட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. சீனா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கான கவலை அதிகரித்து வருவதால், இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. இதனால் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆசிய விளையாட்டு போட்டி: அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா வழங்க மறுத்த சீனா.. இந்தியா பதிலடி !