உலகம்

"தடை செய்யப்பட்ட யுரேனிய ஆயுதத்தை உக்ரைனுக்கு கொடுக்கவேண்டாம்" -அமெரிக்காவுக்கு ஐ.நா கடிதம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது.

ஆனால், அதன் பின்னரும் உக்ரைனுக்கு போரில் வெற்றிகள் கிடைக்காததால், ரஷ்யாவின் டாங்குகளை வீழ்த்த பல்வேறு நாடுகளால் தடை செய்யப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட யுரேனிய குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் அறிவித்தது. மேலும் இதற்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து தாங்களும் அத்தகைய குண்டுகளை அமெரிக்காவுக்கு அளிக்கப்போவதாக கூறியது.

இந்த நிலையில், யுரேனிய குண்டுகளை ஆயுதங்களைப் போரில் பயன்படுத்துவது ராணுவ வீரா்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என ஐ.நா கூறியுள்ளது. இது குறித்து ஐ.நா. சிறப்பு அதிகாரி அலைஸ் ஜில் எட்வா்ட்ஸ் அமெரிக்காவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு யுரேனிய பீரங்கி குண்டுகளை அனுப்பும் முடிவை அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இப்படி பயன்படுத்துவது, ராணுவ வீரா்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும். போா் முடிந்த பிறகும் கூட அந்த ஆயுதங்களால் பொதுமக்களுக்கு ஆபத்து நீடிக்கும். எனவே அத்தகைய ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிக்க வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நீட் தேர்வு தகுதி மதிப்பெண்.. கலந்தாய்வுக் குழு அறிவிப்பின் பின்னணி என்ன ?