உலகம்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு ஏற்பட்ட சோகம்.. பாதைக்காக சுவரை உடைத்த இருவர் கைது !

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான சீனாவில் உள்ள சீனப் பெருஞ்சுவர் உலகப்புகழ் பெற்றது. இதை சுற்றிப்பார்க்க மட்டும் வருடம்தோறும் பல கோடி பேர் சீனாவுக்கு வருகை தருகிறார்கள். மேலும், இது கடந்த 1987-ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் பழங்குடி சமூகத்தினராக மங்கோலியர்களில் திடீர் தாக்குதலில் இருந்து நாட்டை காக்க பல்வேறு காலத்தில் சீனாவை ஆண்ட மாணவர்கள் தங்கள் எல்லை பகுதியில் சிறிது சிறிதாக நான்காயிரம் மைல்கள் தூரத்துக்கு கட்டிய சுவரே சீனப் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படுகிறது. தற்போது சீனாவின் முக்கிய கலாச்சார சின்னமாகவும் இது விளங்கி வருகிறது.

இந்த நிலையில், இப்படி புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரின் ஒருபகுதியை இருவர் சேர்ந்து உடைத்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன பெருஞ்சுவரின் அருகில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், அவர்கள் இருபக்கமும் சென்று வர சில பகுதிகளில் சீன அரசு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் சீன பெருஞ்சுவரின் அருகில் வசிக்கும் 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் ஆகியோர் சீன பெருஞ்சுவரின் இரு பக்கமும் சென்றுவர நெருந்தூரம் செல்லவேண்டியிருந்ததால், சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதியை உடைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சுவரில் ஓட்டை போட்டு இரு பக்கமும் சென்று வந்துள்ளனர். இது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ஆனால், சீன பெருஞ்சுவரில் அவர்கள் ஏற்படுத்திய சேதம் சரிசெய்யமுடியாத அளவு இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சீனாவை தாண்டி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.