உலகம்

நிலவில் நொறுங்கி விழுந்த 'லூனா 25' விண்கலம்.. ரஷ்யாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு.. நடந்தது என்ன ?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டது.

இதனிடையே இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'லூனா 25' என்ற விண்கலத்தை சில நாட்களுக்கு முன்னர் அனுப்பியது. இது சந்திரயான் 3 விண்கலத்தை போல் அல்லாமல் நேரடியாக நிலவுக்கு செல்லும் என்பதால் இது விக்ரம் லேண்டருக்கு முன்பே நிலவின் தென்பகுதியில் இறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 21 அல்லது 22-ம் தேதி 'லூனா 25' நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று 'லூனா 25' விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடேன்ற்து ரஷ்யாவின் நேரப்படி இன்று 14:57 மணிக்கு 'லூனா 25' விண்கலம் தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்தது. அதனைத் தொடர்ந்து 'லூனா 25' விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸும் உறுதி செய்துள்ளது.

Also Read: "எனக்கு AIDS இருக்கிறது,, கிட்ட வந்தா உனக்கும் பரப்பிடுவேன்" -நூதனமாக யோசித்து திருடனை துரத்திய பெண் !