உலகம்

10 நிமிடம் நின்றாலே நீல நிறத்தில் மாறும் கால்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள் !

கடந்த 2019-ம் ஆண்டு உருவான மிகப்பெரிய அலைதான் கொரோனா. இதன் தாக்கம் 2020-ம் ஆண்டு உலகையே உலுக்கியது. சீனாவில் தொடங்கிய இந்த நோய் தொற்றானது, உலகம் முழுக்க பரவி ஒவ்வொரு நாடுகளும் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் லாக் டவுன், pandemic என பலவகையான விஷயங்களை கண்டது. கொரோனா தொற்று காரணமாக நாளொன்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்பட்டது. நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஒவ்வொரு டோஸாக செலுத்திக்கொண்டனர். உலகளவில் இது நடைபெற்றது.

கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அது வெற்றிபெற்று பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னரே கொரோனா தொற்று உலக அளவில் குறையத்தொடங்கியது. எனினும் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து அவ்வப்போது பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

தற்போதும் இந்த நோய் தொற்றினால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த சூழலில் நீண்ட கால கொரோனா பாதிப்பால் இருக்கும் நோயாளிகளுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நிமிடங்கள் நின்றாலே, அவர்கள் கால் நீல நிறத்தில் மாறுவதாக தி லான்செட் (The Lancet) என்ற ஜர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விஞ்ஞானி மனோஜ் சிவன் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 33 வயது நபரை வைத்து ஆய்வு செய்ததில், கால்களின் நரம்புகளில் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் தேங்குவதால் கால்கள் நீல நிறத்தில் மாறி இந்த அக்ரோசைனோசிஸ் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த 33 வயது நபர் எழுந்து நின்ற சில நிமிடங்களிலே அவரது கால்கள் நீல நிறத்தில் மாறுவதாகவும், பின்னர் அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் சில நொடிகளிலே பழைய நிறத்துக்கு மாறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நபருக்கு போஸ்டுரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா சிண்ட்ரோம் (POTS) (postural orthostatic tachycardia syndrome) என்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

POTS என்பது ஒருவர் எழுந்து நிற்கும்போது இதய துடிப்பு வேகமாக இருப்பதால் நிகழ்கிறது. இந்த வகையான கோவிட் தொற்று இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச பிரச்னை, செரிமான சிக்கல், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கால் நீல நிறத்தில் மாறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் குறித்து விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர் மனோஜ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவர்களும் அறியாமல் குழம்பியிருப்பதாகவும் தெரிவித்த அவர், லாங் கோவிட் பாதிப்பால் இது ஏற்படுகிறது என்பது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: அப்போ உ.பி.. இப்போ மும்பை.. ஒரே நாளில் 17 நோயாளிகள் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி !