உலகம்

அமெரிக்க அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்.. எதிர்க்கட்சிகளின் முயற்சியால் சிக்கலில் ஜோ பைடன் !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இது தவறு வயது முதிர்வு காரணமாக பைடன் அடிக்கடி தடுமாறி விழுவது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் அதிபர் பைடனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அதனை வைத்து பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பைடன் மீது நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணை குறித்து பேசியுள்ள குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும் சபாநாயகருமான கெவின் மெக்கார்த்தி , "பைடன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் கேட்கும் தகவல்களை அரசுத் துறைகள் தர வேண்டும். அப்படி அவர்கள் நாங்கள் கேட்கும் தரவுகளைத் தர மறுத்தால் பதவிநீக்க தீர்மானத்தைக் கொண்டு வரும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.