உலகம்

மணிப்பூர் கலவரம் : “இந்தியா விரும்பினால் நாங்கள் உதவுகிறோம்..” - கோரிக்கை வைத்த அமெரிக்கா !

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் 2 பழங்குடியினருக்கு தற்போது மோதல் போக்கு இருந்து வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பீரன் சிங் என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கிறார். பாஜக அங்கே மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரச்னைகள் அதிகரித்த வண்ணமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்மாநிலத்தில் இருக்கும் 'மைத்தேயி' என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் 'குக்கி' என்ற சமூகத்தினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இரு சமூகத்தினரிடையே பிரச்னைகள் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்கே இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் ஒன்றிய - மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து அம்மாநில பாஜக முதலமைச்சர் மீது அம்மாநில பாஜக அமைச்சர்களே புகார் கடிதமும் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் மோடிக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்துள்ளது. மேலும் தற்போது வரை அங்கே மோடி எட்டிக்கூட பார்க்கவில்லை.

தொடர்ந்து இதனை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இப்போது வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், இந்தியா விருப்பப்பட்டால் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். மணிப்பூரில் நடைபெறும் வன்முறையில் குழந்தைகள் மற்றும் தனிநபர்கள் இறப்பதைப் பார்க்கும்போது கவலைப்படுவதற்கு நாங்கள் இந்தியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மணிப்பூர் கலவரம் உள்நாட்டு பிரச்னை தான் என்றாலும் அது கொள்கை ரீதியான பிரச்னை அல்ல; மனித உயிர்களுக்கான பிரச்னை. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் அமெரிக்காவிற்கு முக்கியமானது. அதன் மக்கள், அதன் இடங்கள், அதன் திறன் மற்றும் அதன் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம்." என்று தெரிவித்துள்ளார்.

Also Read: சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !