உலகம்

இறுதி சடங்குக்கு வைக்கப்பட்டிருந்த சடலம்.. 3-ம் நாள் புதைக்கப்படும் முன் உயிரோடு எழுந்ததால் அதிர்ச்சி !

ஈக்வடார் நாட்டில் பாபாஹோயோ நகரம் அமைந்துள்ளது. கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தில் மோன்டோயா என்ற 76 வயது மூதாட்டி ஒருவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் மூதாட்டியை மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர், வீட்டுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைத்தனர். இவரது உடலுக்கு சுமார் 2 நாட்களாக இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. குடும்பத்தினர், நண்பர்கள், வெளிநாட்டில் இருந்த உறவினர்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

2 நாட்கள் கழித்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர் இறுதி சடங்கு முடிந்ததால் அந்த சவப்பெட்டி மூடப்பட்டது. மூடப்பட்ட சில மணி துளிகளிலேயே, அந்த சவப்பெட்டியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. மேலும் அந்த பெட்டியின் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அந்த பெட்டியை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது அந்த மூதாட்டி உயிருடன் கண் விழித்து பார்த்துள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மூதாட்டி உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்ததாக கருதி சவப்பெட்டியில் புதைக்கப்படும் நிலையில் உள்ள மூதாட்டி உயிருடன் வந்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதே போல் பல்வேறு நாடுகளிலும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திடீரென வரதட்சணை அதிகம் கேட்டதால் ஆத்திரம்.. மணமகனை மணக்கோலத்தில் மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார் !