உலகம்
சூடானில் ராணுவத்தை தாக்கிய துணை ராணுவம்.. ஒரே வாரத்தில் 200 பேர் பலி.. உள்நாட்டுப் போரின் பின்னணி என்ன ?
சூடானில் 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் சூடானை ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் ஆண்டு வருகிறார், சூடானின் ராணுவம் முழுக்க முழுக்க இவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
சூடானில் உள்ள சுரங்கங்களை பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையை (RSF) அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார். அதன் தளபதியாக முகமது ஹம்தன் டாக்லோ இருந்து வருகிறார். ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுவந்துள்ளது.
இதன் காரணமாக விரைவில் துணை ராணுவ படையை கலைத்து அதனை ராணுவத்தில் இணைக்க ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதனை துணை ராணுவ படையின் தளபதி முகமது ஹம்தன் டாக்லோ கடுமையான எதிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென துணை ராணுவ படையினர் நாடு முழுவதும் பரவி ராணுவத்தினர் மேல் தாக்குதலைத் தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இந்த மோதலில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த மோதல் காரணமாக இதுவரை சுமார் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா பெரும்தொற்று, உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக உருகுலைந்துள்ள சூடானை இந்த உள்நாட்டு போர் மேலும் சீரழித்துள்ளது.
சூடானின் நடக்கும் இந்த போர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு நாடுகள் சூடானிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!