உலகம்

பிரதமரை நோக்கி வீசப்பட்ட வெடிகுண்டு.. நூலிழையில் தப்பிய ஃபுமியொ கிஷிடா.. ஜப்பானில் நடந்தது என்ன ?

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் பிரதமராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபுமியோ கிஷிடோ பதவியேற்றார். அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவந்த நிலையில், ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஃபுமியோ கிஷிடோ கலந்துகொண்டார்.

அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் தான் வைத்திருந்த பைப் வெடி குண்டை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை நோக்கி வீசியுள்ளார். இந்த குண்டு ஃபுமியோ கிஷிடோவுக்கு சற்றுமுன் விழுந்து வெடித்தது.

இந்த திடீர் தாக்குதலில் அந்த பகுதியே கரும்புகையால் சூழ்ந்த நிலையில், பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை அந்த பகுதியில் இருந்து உடனடியாக பத்திரமாக அழைத்துச்சென்றனர். அதோடு பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் குண்டு வீசிய மர்மநபரை போலிஸார் கைதுசெய்ததாகவும். அவரிடம் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த தாக்குதலில் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பிரதமரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு.. தேர்தல் வந்தாலே இரட்டை நாக்காக மாறும் பாஜக தலைவர்கள் !