உலகம்

நடுவானில் மயக்கமடைந்த பயணி.. அவசரமாக பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம்.. இறுதியில் பயணிக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் தலைநகர் தில்லியில் இருந்து இண்டிகோ விமானத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை கத்தார் நாட்டின் டோஹா நகருக்கு சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த அப்துல்லா (வயது 60) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

விமானம் நடுவழியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நைஜீரியா நாட்டை சேர்ந்த அப்துல்லா மயங்கி சரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் இதுகுறித்து விமானத்தின் பணிப்பெண்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் விமான பணிப்பெண்கள் இதுதொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க விமானம் அவசர தரையிறக்கத்துக்கு தயாராகியுள்ளது. விமானத்துக்கு அருகில் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் இருந்ததால் விமானி கராச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி மயக்கமடைந்துள்ளதை குறித்து விளக்கியுள்ளார்.

இதன் காரணமாக அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் உடனடியாக விமானிகள் கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கு தயாராக இருந்த மருத்துவபணியாளர்கள் மயக்கமடைந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த அப்துல்லாவை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இதனால் விமானத்தில் பயணம் செய்த சகபயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு பிற பயணிகளோடு கத்தார் செல்வதற்கான வழிமுறைகளை இண்டிகோ நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: முதல் ஆவணப்படத்திலேயே ஆஸ்கர் வென்ற தமிழ் பெண்.. யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ?