உலகம்
திவாலானதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க வங்கி.. டெபாசிட் தொகையை எடுக்க திரண்ட பொதுமக்கள்..பீதியில் உலகநாடுகள்!
கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு தொகையை திரும்பபெற்றதால் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இது உலகளாவிய பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் அதிலிருந்து உலகம் மீண்டாளும் 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை தற்போதுவரை பேசப்படும் தீவிர பொருளாதார பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிக்கான் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கூட ரூ.17 லட்சம் கோடி வரை சொத்து வைத்து நல்ல நிலையிலேயே திகழ்ந்தது.
ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், பெரிய அளவில் வராகடனில் சிலிக்கான் வங்கி சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், அதன் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.
இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் சிலிக்கான் வங்கியில் தாங்கள் வைத்திருந்த டெபாசிட் பணத்தை எடுக்க திரண்டனர். 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், தற்போது வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
திவாலான சிலிக்கான் வங்கியை பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த அமைப்பு வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் பணத்தை சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!