உலகம்

துருக்கியில் 2 வாரங்களில் 6,042 முறை நிலநடுக்கம்.. தரைமட்டமான 1 லட்சம் கட்டிடங்கள்.. அதிர்ச்சி தகவல் !

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்போது வரை அங்கு சிறிய அளவில் நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகிறது.

இந்த நிலையில் துருக்கியில் உள்ள 11 மாகாணங்களில் 6,042 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.இதில் 40 நிலநடுக்கம் 5 முதல் 6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாகவும், அதில் ஒன்று 6.6 ரிக்டர் என்ற அளவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகி உள்ளது என்றும் ஒரு லட்சத்துக்கு 5 ஆயிரத்து 794 கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் நேற்று மாலை துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்லூரி Principal-ஐ உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முன்னாள் மாணவர்.. ஷாக் சம்பவம்: காரணம் என்ன?