உலகம்

60 நாளுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களில் 11,000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,கூகுள் போன்ற நிறுவனங்களில் ஏராளமான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் H1B விசாவிலே அங்கு வேலைசெய்து வருகின்றனர். H1B விசாவின் படி ஒரு வெளிநாட்டுக்காரர் வேலையை இழந்தால் 60 நாட்கள் மட்டுமே நாட்டில் இருக்க முடியும்.

அதற்குள் அந்த நபர் வேறு வேலையில் சேரவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவே தற்போது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய பணியிடங்களை நிரப்பாத நிலையில், வேலை இல்லாத வெளிநாட்டவர்கள் 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலரின் குழந்தைகள் அமெரிக்காவிலே படித்துவரும் நிலையில், இது மிக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் கருத்து தெரிவித்துள்ளது.

Also Read: வீல் சேரில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் பிரபலமான காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம் !