உலகம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. முற்றிலும் முடங்கிய நைஜீரியா.. தெரு தெருவாக அலையும் பொதுமக்கள் !

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.

ஆனால், அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட சில மாதங்கள் போதிய மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் ரொக்க பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் அதன்பின்னர் பொருளாதார பிரச்சனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியா பாணியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆப்ரிக்க நாடான நைஜீரியா எடுத்துள்ள நிலையில், அந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவில் 200, 500 மற்றும் 1000 பண நோட்டுகள் செல்லாது என்று திடீரென அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் (17-02-23) அனைத்து பண நோட்டுகளையும் மாற்றவேண்டும் என்றும், அதன்பின்னர் பழைய நோட்டுகள் செல்லாது என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்த நாட்டில் இணையதள வசதி பெரும்பாலான கிராம புறங்களில் இல்லாத நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வழியின்றி ஒரே நாளில் பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். ஏராளமான பொதுமக்கள் வங்கிகளை சூழ்ந்துள்ளதால் வங்கிகளும் திணறி வருகின்றன. மேலும், போதிய புதிய நோட்டுகள் அடிக்கப்படாத நிலையில், பொதுமக்களில் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்த அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு இலவச Scooty" -அமித்ஷா அறிவிப்பு.. இரட்டை வேடம் என இணையவாசிகள் விமர்சனம்!