உலகம்
“வருணாசிரமம்.. ஏலியன்கள்.. இலுமினாட்டி” : இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க எந்த கலாசாரம் சிறந்தது?
எந்த கலாசாரம் சிறந்தது?
எண் 13 இருக்கிறதல்லவா? மேற்குலகை பொறுத்தவரை அது ராசியில்லாத நம்பர். ஏன் என்றெல்லாம் தெரியாது. ஆனால் கெட்ட சகுனம், ராசியற்றது போன்ற கருத்துகள் எண் 13-ஐ பற்றி அங்கு உண்டு. விளையாட்டுக்கு சொல்லவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்போது கூட 13ம் தளம் இல்லாமல் கட்டும் வழக்கம் அங்கு உண்டு. 12ம் தளத்தில் இருப்பவன் நேராக லிஃப்டில் 14ம் தளத்துக்குதான் செல்ல முடியும். 13ம் தளத்துக்கான எண்ணே லிஃப்டில் இருக்காது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
நிச்சயமாக அந்த நபர் செல்லும் 14ம் தளம் 13ம் தளமாகதான் இருக்கும். எண்ணை மட்டும் மாற்றி 14 என போட்டிருப்பார்கள். இப்படியொரு மழுமட்டையான நம்பிக்கையை யாரேனும் கொள்ள முடியுமா?
மேற்குலகில் பெரும்பான்மையானோருக்கு இந்த நம்பிக்கை உண்டு. 13ம் எண் மட்டுமல்ல, பல நம்பிக்கைகள் அங்கு உண்டு. உச்சம், ஏலியன்கள் பற்றிய நம்பிக்கை!
பிரபஞ்சத்தில் எங்கேனும் ஒரு மூலையில் ஏலியன்கள் (வேற்றுகிரக ஜீவராசிகள்) வசிக்கும் வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால் இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். ஏனெனில் துலக்கமான தொடர்பு என எதுவும் இந்த நொடி வரை கிடைக்கவில்லை.
ஆனால் ஏலியன்கள் இருப்பதாக அமெரிக்கர்கள் பலர் நம்புவார்கள். பறக்கும் தட்டை பார்த்ததாக பலர் சொல்ல செய்தி பார்த்திருப்பீர்கள். நவீன தொழில்நுட்பங்களை அமெரிக்கா ஏலியன்களிடம் இருந்துதான் பெறுகிறது என நம்புவோர் உண்டு. அமெரிக்க அரசு ரகசியமாக ஏரியா 51 என்ற பகுதியில் ஏலியன்களை சந்தித்து ஆய்வு செய்து நுட்பங்களை பெறுவதாக சொல்வார்கள். உச்சக்கட்டமாக பூமியில் ஏற்கனவே ஏலியன்கள் வந்திருப்பதால்தான் பிரமிடு உள்ளிட்ட மனித அறிவுக்கு எட்டாத கட்டுமானங்கள் கட்ட முடிந்தது என்றும் சொல்வார்கள்.
எண் 13, ஏலியன்கள் போன்றவற்றை கூட விடுங்கள். இலுமினாட்டி?
மேற்குறிப்பிட்ட விஷயங்களின் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. தமிழில் 13ம் நம்பர் வீடு என ஒரு பேய் படம் வந்தது நினைவில் இருக்கலாம். ஏலியன்களை வைத்து இந்தி படங்கள் வந்திருக்கின்றன. இலுமினாட்டி பற்றிய பேச்சு தமிழ்ச்சூழலின் அரசியலையே பதம் பார்க்குமளவுக்கு நிலை எட்டியதையும் பார்த்தோம்.
மேற்குலகின் நம்பிக்கைகள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க பரவியிருக்கிறது. காரணம், அதிகாரம்!
அதிகாரத்தை மூலதனம் முடிவு செய்கிறது. உலகின் பணக்கார அல்லது so called வல்லரசு நாடுகளின் பெரும்பாலானவை கடந்த நூற்றாண்டின் இறுதி வரை மேற்கில்தான் இருந்தன. அந்த நாடுகளை பிற நாடுகள் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயமே அதிகம் இருந்தது.
குறிப்பாக சோவியத் உடைந்த பிறகான கடந்த முப்பது ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு வேறு வழியில்லை. மேற்குலக நாடுகளை அனுசரித்து போக வேண்டிய நிலை. அந்த நாடுகளின் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், அங்கு இருக்கும் நம்பிக்கை முறைகளும் கூட இங்கு வரும் வாய்ப்புகள் கூடின.
இன்னொரு விஷயமும் உண்டு.
நம்மூர் காதலுறவுகளை விட மேற்குலகின் காதலுறவு மேம்பட்டவை. ஆனால் நம்மூரில் அதையெல்லாம் கொச்சையாக பேசுவார்கள். காதலரை கட்ட விட மாட்டார்கள். மாடுகளை கட்டிப்பிடிக்க சொல்வார்கள்.
அதே போல் நம்மூரில் ஒரு காலத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றவர்கள் இருந்தனர். ஆனால் அதை தூர வைத்துவிட்டு நாம் சாதியைக் கையிலெடுத்தோம். எப்படி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற பண்பாடு, வருணாசிரமம் கலந்து சாதியாகி கெட்டிப்பட்டு இன்று அருவருப்பாக மாறியது?
அதே விடைதான். தமிழ்ச்சூழலின் மொத்த உற்பத்தியையும் (மூலதனத்தையும்) திரட்ட பேரரசுகளின் காலத்தில் தேவை எழுந்தது. அச்சமயத்தில் அவர்களுக்கு ஓடி வந்து கை கொடுத்தவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனியம் ஒரு காலக்கட்டத்தில் தமிழ்ச்சூழலின் மூலதனத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தபோது, தமிழ்ச்சூழல் சாதிமயமாக்கப்பட்டது.
நாளையே அமெரிக்கா ஒடுங்கி சீனா வல்லரசாகி சீன மூலதனம் உலகமெங்கும் பரவினால் நம் அரச விழாக்களில் டிராகன் நடனம் இடம்பெறலாம். குழந்தைகளுக்கு டிராகன் எனப் பெயரிடலாம். பார்ப்பனர்களும் பார்ப்பனிய ஆதரவாளர்களும் இந்திய ஞான மரபில் டிராகனின் பங்கை குறித்து வகைதொகையாக எழுதித் தள்ளலாம்.
உலகம் முழுவதையும் கலாசாரங்களாக உதிர்த்து கொட்டத் தொடங்கினால் பூமி கொள்ள முடியாதளவு பழக்கவழக்கங்களும் கலாசாரங்களும் குவியும். அவற்றிலிருந்து சமத்துவத்தையும் அறத்தையும் முற்போக்கையும் நாம் பிரித்து பார்த்து பகுத்தறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ‘எல்லா நோய்களுக்கும் ஒரு மாத்திரை’ என்பது போல திட்டவட்டமாக ஒரு கலாசாரம் தீர்வாக வைக்க முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ தன்மையையும் சமத்துவ மரபையும் தேடி எடுத்துக் கொள்ளலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!