உலகம்

சூரியனின் வடபகுதியை படமெடுத்ததா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ? - பரவும் பொய்தகவல்.. உண்மை நிலை என்ன ?

நாசாவால் அனுப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த திறன் கொண்ட ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியர் 5 ராக்கெட் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் தயாரிப்பு பணியில் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதிலும் விண்வெளியில் ஒரு சிறு விண்மீன் திரள்களை படம் எடுத்ததும், கரினா நெபுலாவை படம் எடுத்ததும் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சூரியனின் வடபகுதி ஒன்று தற்போது தனியே பிரிந்ததாகவும், சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து, அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும் புயலைப் போல் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்ததகவல் ஒரு தகவல் பரவிவருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதில் சூரியனின் வடபகுதி ஒன்று தற்போது தனியே பிரிந்ததாக கூறப்பட்ட செய்தி குறித்து விஞ்ஞானிகள் விவாதித்து வந்தது உண்மை என்றாலும், இதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்தது என்பது தவறான ஒரு தகவலாகும்.

காரணம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கி அதன்மூலம் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் குறித்தோ அல்லது, கேலக்சி குறித்தோ புகைப்படத்தை நமக்கு கொடுக்கும். ஆனால், இந்த தொலைநோக்கி எப்போதும் சூரியனை படமெடுக்காது.

ஏனெனில் சூரியன் பூமிக்கு அருகில் இருப்பதால் அளவுக்கு அதிகமான அகச்சிவப்பு கதிர்களை வெளியிடும். இதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உள்வாங்கினால் அதன் திறன் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் சூரியனின் அகச்சிவப்பு கதிர்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அது சூரியனுக்கு எதிர் பக்கத்தை பார்த்தவாறு நிலைபடுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க அது எப்போதும் பூமியின் நிழல் படும் வகையில்தான் அது வானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியனின் வடபகுதியை படமெடுத்தது என்று கூறப்பட்டுள்ள தகவல் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Also Read: Online Order பரிதாபங்கள் : Bread Packet-க்குள் உயிரோடு இருந்த எலி.. உறைந்துபோன வாடிக்கையாளர் - VIDEO !