உலகம்
துருக்கி நிலநடுக்கத்தில் 4000 பேர் பலி.. இயற்கை பேரழிவை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்.. வைரலாகும் பதிவு !
மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.
பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் 7.5 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் 6 என்ற ரிக்டர் அளவில் 3 -வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தவிர ரிக்டரில் 4 என்ற அளவில் 30 முறை அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சிதிலமடைந்த கட்டிடங்கள் கூட தொடர்ந்து இடிந்துவருவதால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 4 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ். புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்" என்று கூறியுள்ளார். அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ளது. மேலும், இது போன்ற ஆய்வுகளை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?